search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருட்டு கும்பல்"

    புதுவையில் கார் கண்ணாடிகளை உடைத்து பொருட்களை திருடும் கும்பலை சேர்ந்த ஒருவனை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
    புதுச்சேரி:

    புதுவையில் சமீப காலமாக கார் கண்ணாடிகளை உடைத்து பொருட்களை திருடும் சம்பவங்கள் அதிகரித்து வந்தன.

    குறிப்பாக புதுவைக்கு சுற்றுலா வரும் வெளிமாநில கார்களில் கண்ணாடி உடைக்கப்பட்டு பொருட்களை திருடுவது நடந்து வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு முன்னாள் எம்.பி. கண்ணன் புதுவையில் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு சென்றபோது அவரது காரின் கண்ணாடியை உடைத்து அவர் வைத்திருந்த பணத்தை திருடி சென்றனர்.

    இந்த நிலையில் நேற்று சென்னையை சேர்ந்த தனியார் நிறுவன மானேஜர் பிரகாஷ் (வயது 37) என்பவர் உறவினரை பார்க்க காரில் புதுவை வந்தார். அரசு மருத்துவமனை அருகே காரை நிறுத்திவிட்டு உறவினரை பார்க்க சென்றார்.

    பின்னர் சிறிது நேரம் கழித்து காரை எடுக்க வந்தபோது காரின் அருகே ஒரு வாலிபர் சந்தேகப்படும் படி நின்று கொண்டிருந்தார். காரின் ஒரு பக்க கண்ணாடி உடைக்கப்பட்டு இருந்தது. அந்த வாலிபரை பிரகாஷ் பிடிக்க முயன்றபோது அவன் தப்பி ஓடிவிட்டான்.

    இதையடுத்து பிரகாஷ் திருடன் திருடன் என கூச்சலிட்டார். உடனே அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து வாலிபரை மடக்கி பிடித்தனர்.

    விசாரணையின்போது அந்த வாலிபர் காரின் கண்ணாடியை உண்டி வில்லால் உடைத்து காரில் வைத்திருந்த லேப்-டாப்பை திருட முயன்றது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து அந்த வாலிபரை பெரியக்கடை போலீசில் ஒப்படைத்தனர். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் வெற்றிவேல், முருகன் ஆகியோர் அந்த வாலிபரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் அவர் திருச்சி ராஜாஜி நகரை சேர்ந்த பிரசாத் (26) என்பதும், இவருடன் மேலும் 4 பேர் சேர்ந்து புதுவையில் பல்வேறு இடங்களில் கார் கண்ணாடியை உடைத்து பணம் மற்றும் பொருட்களை திருடியதும் புதுவையில் 8 இடங்களிலும், காரைக்காலில் 2 இடங்களிலும் இதுபோல் பொருட்களை திருடி உள்ளனர்.

    இதையடுத்து பிடிபட்ட பிரசாத் கொடுத்த தகவலின் அடிப்படையில் மற்ற 4 பேரை பிடிக்க பெரியக்கடை போலீசார் திருச்சி விரைந்துள்ளனர்.
    ×